4415. இடியும், மாக் கடல் முழக்கமும்
      வெருக் கொள இசைக்கும்
முடிவு இல் பேர் உறுக்கு
      உடையன, விசையன, முரண,
கொடிய கூற்றையும் ஒப்பன,
      பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படை கொண்ட
      புகுந்தனன் - நீலன்.

     நீலன் - நீலன் என்பவன்; இடியும் மாக் கடல் முழக்கமும் -
இடியோசையும் பெரிய கடலின் ஆரவாரமும்; வெருக் கொள - அஞ்சி
அடங்கும்படி; இசைக்கும் - ஒலிக்கின்ற; முடிவு இல் பேர் உறுக்கு
உடையன -
எல்லையற்ற பேராரவாரத்தை உடையனவும்; விசையன - மிக்க
வேகத்தையுடையனவும்; முரண - வலிமையுடையனவும்; கொடிய கூற்றையும்
ஒப்பன -
கொடுமையுள்ள யமனைப் போன்றனவுமாகிய; பதிற்றைந்து
கோடி-
ஐம்பது கோடி; நெடிய வானரப் படை கொண்டு - பெரிய வானர
சேனையை உடன் கொண்டு; புகுந்தனன் - வந்து சேர்ந்தான்.

     நீலன்: அக்கினியின் மகன்; இவன் வானர சேனைகள் எல்லாவற்றிற்கும்
முதல் தலைவன்.  பத்து + ஐந்து : பதிற்றைந்து - இற்றுச் சாரியை பெற்ற
ஐம்பதைக் குறிக்க வந்த பண்புத் தொகை.  கொடுமையிலும் உயிர்
கவர்வதிலும் கூற்று உவமை.                                      9