4416.மா கரந்தன, உரத்தன,
      வலியன, நிலைய,
வேகரத்த, வெங் கண்
      உமிழ் வெயிலன, மலையின்
ஆகரத்தினும் பெரியன,
     ஆறு - ஐந்து கோடி
சாகரத்தோடு்ம் - தரீமுகன்
      என்பவன் - சார்ந்தான்.

     தரீமுகன் என்பவன் - தரீமுகன் என்னும் வீரன்; மா கரந்தன -
பெரிய கைகளையுடையனவும்; உரத்தன - வலிய மார்பையுடையனவும்;
வலியன -
தேக வலிமையுடையனவும்; நிலைய - (செயலில்)
உறுதியுள்ளனவும்; வேகரத்த - உக்கிரமுடையனவும்; வெம்கண் உமிழ்
வெயிலன -
கொதிக்கும் கண்களிலிருந்து தெறிக்கின்ற தீப்
பொறிகளையுடையனவும்; மலையின் ஆகரத்தினும் பெரியன - மலை யின்
வடிவத்தைக் காட்டிலும் பெரிய வடிவமுடையனவுமான; ஆறு ஐந்து கோடி -
முப்பது கோடி; சாகரத் தொடும் - வானர சேனைக் கடலோடும்;
சார்ந்தான்- வந்து சேர்ந்தான்.

     தரீமுகன்: குகை போன்ற முகத்தையுடையவன் என்பது பொருள்.
வேகரம்: கொடுமை, உக்கிரம், சேனைக்குச் சாகரம் பரப்பும் பெருமையும்
கொந்தளிப்பும் பற்றி வந்த உவமை.                              10