4417. | இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க, முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும், விளைத்த வெஞ் சினத்து, அரிஇனம் வெருவுற விழிக்கும் அளக்கரோடும், - அக்கயன் எனும் பெயரன் - வந்து அடைந்தான். |
அக்கயன் எனும் பெயரன் - அக்கயன் என்னும் பெயரையுடைய வீரனும்; வேறு ஒரு மாநிலம் - (தாம் தங்குவதற்க இந்த நிலவுலகம் போதாமையால்) வேறொரு அகன்ற பூமி; வேண்டும் என்று - வேண்டும் என்று; இளைத்து இரங்க முளைத்த - வருந்தி மனம் இரங்கும்படி தோன்றினவும்; முப்பதினாயிர கோடியின் - முப்பதினாயிரங் கோடி என்ற தொகை கொண்டு; முற்றும் விளைத்த - உலகமெங்கும் பரவி யனவுமான; வெம் சினத்து அரி இனம் - கடுமையான கோபமுடைய சிங்கக் கூட்டங்களும்; வெருவுற விழிக்கும் - அஞ்சுமாறு நோக்குகின்ற; அளக்கரோடும் - வானர சேனைக் கடலோடும்; வந்து அடைந்தான் - வந்து சேர்ந்தான். ஒவ்வொன்றும் மிகவும் பருத்திருப்பதால் அக்கயனது முப்பதினாயிரங் கோடிச் சேனை தங்குவதற்கு இந்த உலகம் போதாதென்பது கருத்து. அளக்கர்: கடல். சேனைக்கு உவமையாகுபெயர். 11 |