4418. | ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த பாயிரப் பெரும படை கொண்டு, பரவையின் திரையின் தாய், உருத்து உடனே வர - தட நெடு வரையை ஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும், - வந்து இறுத்தான். |
தட நெடு வரையை ஏய் - பெரிய உயர்ந்த மலையை ஒத்த; உருப் புயம் - வடிவத்தோடு கூடிய தோள்களையுடை; சாம்பன் என்பவனும் - சாம்பவானும்; பரவையின் திரையின் தாய் - கடலின் அலைகளைப் போலப் பாய்ந்து; உருத்து - வெகுண்டு; உடனே வர - பின்னே தொடர்ந்து வர; ஆயிரத்து அறுநூறு கோடியின் - ஆயிரத்து அறுநூறு கோடி என்னும் கணக்கையுடைய; கடை அமைந்த - இடங் களில் நிரம்பிய; பாயிரப் பெரும்படை கொண்டு - சிறப்பான பெரிய வானரப் படையை உடன்கொண்டு; வந்து இறுத்தான் - வந்து தங்கினான். பாயிரம் - விருது, சிறப்பு. நூல்களின் முன்னுரையாக அமைந்து நூல் நுவலும் பொருளின் சிறப்பைத் தெளிவுறப் புலப்படுத்தும் பகுதியைப் பாயிரம் என்பர்; அதுபோல சாம்பனின் படைத் திறத்தைத் தெளிவாகப் புலப்படுத்தியதாக தூசிப் படை (முன்னணிப் படை) அமைந்தது என்றும் கொள்ளலாம். சாம்பன் - ஜாம்பவான்; பிரமன் கொட்டாவியிலிருந்து கரடி வடிவத்தில் தோன்றியவன்; திருமாலின் திருவிக்கிர அவதாரத்தின்போது உலகம் முழுவதும் நிரம்பிப் பேருருவம் கொண்டிருந்த அப்பெருமானைப் பதினெட்டு முறை வலம் செய்தவன் என்று இவன் புகழை நூல்கள் கூறும். உறுப் புயச் சாம்பன் என்ற தொடருக்குப் பகைவர்க்கு அச்சம் தரும் தோள்களை உடைய சாம்பன் எனவும் பொருள் கொள்ளலாம். உரு உட்கு (அச்சம்) ஆகும் என்பது தொல்காப்பியம். 12 |