4419. | வகுத்த தாமரை மலர் அயன், நிசிசரர் வாழ்நாள் உகுத்த தீவினை பொருவரும் பெரு வலி உடையான், பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி தொகுத்த கோடி வெம் படை கொண்டு, - துன்முகன் - தொடர்ந்தான். |
வகுத்த தாமரை மலர் அயன் - வாழ்நாள் இவ்வளவே என வரையறுத்த தாமரை யாசனத்தானான நான்முகன; நிசிசரர் வாழ்நாள் உகுத்த தீவினை - அரக்கர்களின் வாழ்நாளை அழித்திடும் தீவினை (ஆகிய இரு பெரும் சக்திகளுக்கு மீறிய); பொருவு அரும் வலி உடை யான் - ஒப்பற்ற வலிமை உடையவனாகிய; துன்முகன் - துன்முகன் என்பவன்; பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி - அணி வகுக்கப்பட்ட பத்து லட்சத்தின் இரட்டிப்பு (அதாவது இருபது லட்சம்); தொகுத்த கோடி - கூட்டிய கோடி (அதாவது இருபதுலட்சம் கோடி); வெம்படை கொண்டு - கொடிய படைகளை அழைத்துக் கொண்டு; தொடர்ந்தான் - தொடர்ந்து வந்தான். துன்முகன் - அழகில்லாத முகத்தினன். நான்முகனால் அரக்கரின் வாழ்நாள் வரையறுக்கப்பட்டுள்ளது; அரக்கர் செய்த தீவினையும் அவர் வாழ்நாளுக்கு இறுதியை உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு சக்திகளுக்கும் மேலாகத் துன்முகனின் வலிமை அரக்கருக்கு அழிவு செய்தே தீரும் என்பது கருத்து. 13 |