4420. | இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி உயர்ந்த வெஞ் சின வானரப் படையொடும், ஒருங்கே, - சயம்தனக்கு ஒரு வடிவு எனத் திறல் கொடு தழைத்த மயிந்தன் - மல் கசகோமுகன்தன்னொடும், வந்தான். * |
சயம் தனக்கு ஒரு வடிவென - வெற்றியே ஓர் உருக் கொண்டது என்று கூறும்படி; திறல் கொடு தழைக்க - போர் வன்மையால் உயர்ந்த; மயிந்தன் - மயிந்தன் என்னும் வீரன்; மல் கச கோமுகன் தன்னொடும் - மற்போரில் சிறந்த கச கோமுகன் என்பவனோடும்; இயைந்த பத்து நூறாயிரம் பத்து எனும் கோடி - பொருந்திய நூறு லட்சங் கோடி என்ற எண்ணுள்ள; உயர்ந்த வெம் சின வானரப் படையொடும் - மிகக் கொடிய சினத்தையுடைய வானர சேனையோடும்; ஒருங்கே வந்தான் - ஒரு சேர வந்தான். மயிந்தனும் கசகோமுகனும் நூறு லட்சங் கோடி சேனையுடன் வந்தார்கள் என்பது. மயிந்தனும் துமிந்தனும் அசுவினி தேவர்களின் அமிசத்தால் பிறந்த வானரராவர். 14 |