4421.கோடி கோடி நூறாயிரம்
      எண் எனக் குவிந்த
நீடு வெஞ் சினத்து அரிஇனம்
      இரு புடை நெருங்க,
மூடும் உம்பரும், இம்பரும்,
      பூமியில் மூழ்க, -
தோடு இவர்ந்த தார்க்கிரி புரை
      துமிந்தனும் - தொடர்ந்தான்.

     தோடு இவர்ந்த தார்க்கிரி புரை - இதழ்கள் அமைந்த மலர்
மாலையை அணிந்தவனும் மலையை ஒத்தவனுமான; துமிந்தன் - துமிந்தன்
என்னும் வீரனும்; கோடி கோடி நூறு ஆயிரம் எண் எனக் குவிந்த - பல
கோடி இலட்சக் கணக்காக நிறைந்த; நீடு வெஞ்சினத்து அரி இனம் - மிகக்
கொடிய கோபத்தையுடைய வானரக் கூட்டம்; இரு புடை நெருங்க - இரு
பக்கங்களிலும் நெருங்கி வரவும்; மூடும் உம்பரும் - பூமியின்மேல் கவிந்த
ஆகாயமும்; இம்பரும் பூமியில் மூழ்க - இவ் வுலகமும் (அச்சேனைகள்
வரும் போது எழும்) புழுதியில் மறைந்து விடவும்; தொடர்ந்தான் - பின்
வந்தான்.

     வீடணன் இராமனிடம் சரண்புக வருகையில் அவனை முதன் முதலாக
எதிர்கொண்டவர்கள் இவ்விருவருமேயாவர்.                          15