4422. | கறங்கு போல்வன, காற்றினும் கூற்றினும் கடிய, பிறங்கு தெண் திரைக் கடல் புடைபெயர்ந்தெனப் பெயர்வ, மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த, திறம் கொள், வெஞ் சினப் படைகொடு, - குமுதனும் - சேர்ந்தான். |
குமுதனும் - குமுதன் என்னும் வீரனும்; கறங்கு போல்வன - காறற்ாடி போல விரைந்து செல்வனவும்; காற்றினும் கூற்றினும் கடிய - காற்றைக் காட்டிலும் வேகம் உடையனவும், யமனைவிடக் கொடு மையுடையனவும்; பிறங்கு தெண்திரை - விளங்குகின்ற தெளிவான அலைகளையுடைய; கடல் புடை பெயர்ந்து எனப் பெயர்வ - கடல் இடம் விட்டு எழுந்தது போன்று செல்வனவும்; மறம் கொள் வானரம் - வீரம் கொண்ட வானரங்கள்; ஒன்பது கோடி எண் வகுத்த - ஒன்பது கோடியென்று கணக்கிடப்பட்டனவும்; திறம் கோள் வெம்சினப் படை கொடு - மனவலியும் உடல் வன்மையும் கடுமையான கோபமும் கொண்டனவுமான படைகளை உடன் கொண்டு; சேர்ந்தான் - வந்து சேர்ந்தான். கறங்கு - காற்றாடி; வானத்தில் சுழன்று செல்வதெனக் காரணக் குறியாயிற்று. கடிய - இரட்டுறமொழிதல்: காற்றினும் கூடிய கூற்றினும் கடிய என வேகத்தையும் கொடுமையையும் குறித்தவாறு. 16 |