4423. ஏழின் ஏழு நூறாயிர
      கோடி என்று இசைந்த
பாழி நல் நெடுந் தோள்
      கிளர் படை கொண்டு, பரவை
ஊழி பேரினும் உலைவில,
     உலகினில் உயர்ந்த
பூமி விண் புக, - பதுமுகன்
      என்பவன் - புகுந்தான்.  *

     ஊழி பரவை பேரினும் - உலக முடிவுக் காலத்தில் கடல் பொங்கி(த்
தனது நிலையைவிட்டு)ப் பெயர்ந்து வந்தாலும்; உலைவு இல -
அழிவற்றனவாகிய; ஏழின் ஏழு நூறு ஆயிர கோடி என்று இசைந்த -
நாற்பத் தொன்பதினாயிரங் கோடி என்ற கணக்கோடு பொருந்திய; பாழி நல்
நெடுந்தோள் -
வலிமை மிக்க அழகிய நீண்ட தோள்களோடு விளங்குகின்ற;
கிளர் படை கொண்டு -
வானரப் படையை உடன் கொண்டு; உலகினில்
உயர்ந்த பூமி -
பூமியிலிருந்து மேலே எழுந்த புழுதி; விண் புக -
ஆகாயத்திற்குச் செல்லும்படி; பதுமுகன் என்பவன் -  பதுமுகன் என்னும்
தலைவன்; புகுந்தான் - வந்துசேர்ந்தான்.

     ஏழின் ஏழு - பண்புத் தொகை: ஏழினால் பெருக்கிய ஏழு
(நாற்பத்தொன்பது). உம்மைத் தொகையாகக் கொள்ளின் ஏழும் ஏழும் -
ஏழொடு சேர்ந்த ஏழு - (பதினான்கு) எனப் பொருள்படும்.             17