4427.நொய்தின் கூடிய
      சேனை, நூறாயிரகோடி
எய்த, தேவரும், 'என்கொலோ
      முடிவு?' என்பது எண்ண,
மையல் சிந்தையால் அந்தகன்
      மறுக்குற்று மயங்க, -
தெய்வத் தச்சன் மெய்த் திரு
      நெடுங்காதலன் - சேர்ந்தான்.

     தெய்வத் தச்சன் மெய்த்திரு நெடுங் காதலன் - தேவ சிற்பியாகிய
விசுவகர்மாவின் பிரதியுருவே எனத்தக்க அழகிய உயர்நத் மகனாகிய நளன்
என்பவன்; தேவரும் - தேவர்களும்; என்கொலோ முடிவு - இப் படையின்
எல்லையாதோ; என்பது எண்ண - என்று கருதும்படியாக; அந்தகன் மையல்
சிந்தையால் -
யமனும் இதைக் கண்டதனாலாகிய மயக்கம் கொண்ட
மனத்தால்; மயக்குற்று மயங்க - கலங்கித் திகைக்கவும்; நொய்தின் கூடிய -
விரைவில் திரண்ட; நூறாயிர கோடி சேனை எய்த - இலட்சக் கோடிக்
கணக்கான வானர சேனை தன்னோடு வர; சேர்ந்தான் - வந்தடைந்தான்.

     அந்தகன்: உயிர்களுக்கு அந்தத்தைச் செய்பவனென யமனுக்குக்
காரணக் குறி. நளன்: தெய்வத் தச்சனான விசுவகர்மாவின் மகனாய்ப் பிறந்த
ஒரு வானர வீரன்; தன் கையால நீரில் எதைப் போட்டாலும் மிதக்கும்படி
வரம் பெற்றவன்.  திரு நெடு என்றதனால் உடல்வனப்பும் உயரமும் குறிக்கப்
பெற்றன.                                                     21