4428. | கும்பனும், குலச் சங்கனும், முதலினர், குரங்கின் தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை, இம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது, இராகவன் ஆவத்து அம்பு எனும் துணைக்கு உரிய; மற்று உரைப்பு அரிது அளவே. |
கும்பனும் - கும்பன் என்பவனும்; குலச் சங்கனும் - சிறந்த சங் கன் என்னும் வீரனும்; முதலினர் - முதலானவர்களாகிய; தம் பெருங் குரங்கின் படைத்தலைவர்கள் - தம்முடைய பெரிய வானர சேனைத் தலைவர்கள்; தரவந்த - தம்முடன் திரட்டிக் கொண்டு வந்த; தானை - வானர சேனையானது; இம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது - இவ்வுலக மக்களாலும் கணக்கிட முடியாதது; இராகவன் ஆவத்து அம்பு என்னும் - இராமனின் அம்பறாத் தூணியிலுள்ள அம்புகளின்; துணைக்கு உரிய - அளவாமென்று சொல்லத்தக்க அளவுடையது (அல்லாமல்); அளவு மற்று உரைப்பரிது - அந்தப் படையின் அளவைப் பற்றி வேறு எவ்வகையிலும் சொல்லுவது அரியது. இராமனது அம்புப் புட்டிலில் அம்புகள் அளவில்லாது நிறைந்திருப்பது போலக் கும்பன், சங்கன் ஆகியோரின் சேனைகளிலும் வானரங்கள் அளவற்று நிறைந்திருந்தன. ஆவம் - அம்புப் புட்டில், அம்பறாத்தூணி. 22 |