4430. எண்ணின், நான்முகர்
      எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்
      பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்கறின், கண்ணுதலானுக்கும்
      கதுவா, -
மண்ணின் மேல் வந்த
      வானர சேனையின் வரம்பே!

     மண்ணின்மேல் வந்த - பூமியின்மேல் ஒருங்கு திரண்டு வந்த; வானர
சேனையின் வரம்பு -
வானரப் படையின் அளவை; எண்ணின் - எண்ணத்
தொடங்கினால்; நான்முகர் எழுபதினாயிரர்க்கு - எழு பதினாயிரம்
பிரமர்களுக்கும்; இயலா - முடியாது; உண்ணின் - (இவ் வானர சேனைகள்)
உண்ணத் தொடங்கினால்; அண்டங்கள் - அண்டங்களும் யாவும்;
ஓர் பிடி உண்ணவும் உதவா -
ஒவ்வொரு வானரமும்
ஒரு பிடியளவாக உண்ணவும் போதாது; கண்ணின் நோக்குறின் -
கண்ணால் பார்க்க வேண்டுமாயின்; கண்ணுதலானுக்கும் கதுவா - நெருப்புக்
கண்ணை நெற்றியிலுடையவனாகிய சிவபெருமானாலும் காண இயலாது.

     இவ்வானரப் படையைப் படைத்த பிரமன் போன்ற எழுபதினாயிரம்
பிரமர்கள் ஒருங்கே திரண்டு வந்தாலும் இச் சேனையை அளவிடமுடியாது.
இயல்பான இரண்டு கண்களுடன் நெருப்புக் கண்ணையும் நெற்றியில் கொண்ட
சிவனாலும் பார்க்கவியலாத பரப்பளவு கொண்டது அவ்வானரப்படை என்பது.
                                                             24