4431. ஒடிக்குமேல், வட மேருவை
      வேரொடும் ஒடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக
      முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல், பெருங் காற்றையும்
      கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும்
      குடங்கையின் குடிக்கும்.

     ஒடிக்குமேல் - (அவ்வானர சேனை) ஒடிக்க வேண்டும் என்று
கருதினால்; வட மேருவை வேரொடும் ஒடிக்கும் - வடக்கிலுள்ள மேரு
மலையையும் அடியோடு ஒடித்துவிடும்; இடிக்குமேல் - இடிக்க
வேண்டுமென்று கருதினால்; நெடு வானக முகட்டையும் இடிக்கும் - பெரிய
ஆகாயத்தின் மேல் முகட்டையும் இடித்து விடும்; பிடிக்குமேல் - பிடிக்க
வேண்டும் என்று விரும்பினால்; பெருங் காற்றையும் - பெரிய காற் றையும்;
கூற்றையும் பிடிக்கும் -
யமனையும் பிடித்து விடும்; குடிக்கு மேல் - குடிக்க
வேண்டும் என்று நினைத்தால்; கடல் ஏழையும் - ஏழு கடல்களையும்;
குடங்கையின் குடிக்கும் -
உள்ளங்கையால் அள்ளிக் குடித்து விடும்.

     பிறர் எவராலும் செய்யமுடியாத அரிய பெரிய செயல்களையெல்லாம்
எளிதில் செய்து முடிக்கும் இவ் வானரப்படை என்பது.                 25