4432. ஆறு பத்து எழு
      கோடியாம் வானரர்க்கு அதிபர்,
கூறு திக்கினுக்கு அப்புறம்
      குப்புறற்கு உரியார்,
மாறு இல் கொற்றவன் நினைத்தன
      முடிக்குறும் வலியர், -
ஊறும் இப் பெருஞ் சேனை
     கொண்டு - எளிதின் வந்துற்றார்.

     கூறு திக்கினுக்கு அப்புறம் - (எட்டாகச்) சொல்லப்படும் திசைகளுக்கு
அப்பாலும்; குப்புறற்கு உரியார் - தாண்டிக் குதிக்கத்தக்க
வல்லமையுள்ளவர்களும்; மாறு இல் கொற்றவன் - இணையற்ற தங்கள்
அரசனான சுக்கிரீவன்; நினைத்தன முடிக்குறும் வலியர் - எண்ணிய
செயல்களை உடனே செய்து முடிக்கும் மனவுறுதியுடையவர்களுமாகிய; ஆறு
பத்து எழுகோடியாம் -
அறுபத்தேழு கோடி அளவுள்ள; வானரர்க்கு
அதிபர் -
வானர சேனைத் தலைவர்; ஊறும் இப் பெருஞ் சேனை
கொண்டு -
மேன்மேலும் பெருகுகின்ற இப் பெருஞ் சேனையைத் திரட்டிக்
கொண்டு; எளிதின் வந்துற்றார் - எளிதில் வந்து சேர்ந்தார்கள்.

     இவ்வாறு அறுபத்தேழுகோடி வானரப் படைத் தலைவர்கள் சுக்கிரீவனின்
தூதுவர் வந்து சொல்லியவுடனே தம் சேனைகளைத் திரட்டி0க் கொண்டு வந்து
சேர்ந்தனர் என்பது.  குப்புறல் - குதித்தல்.                        26