படைத் தலைவர்கள் சுக்கிரீவனை வணங்குதல்

4433.ஏழு மா கடல் பரப்பினும்
      பரப்பு என இசைப்பச்
சூழும் வானரப் படையொடு,
      அவ் வீரரும் துவன்றி,
'ஆழி மா பரித்
      தேரவன் காதலன் அடிகள்
வாழி! வாழி!' என்று உரைத்து,
      அலர் தூவினா, வணங்கி.    *

     அவ்வீரரும் - அந்த வானரப் படைத் தலைவர்களும்; ஏழு மா கடல்
பரப்பினும் -
ஏழு பெரிய கடல்களின் பரப்பளவைக் காட்டிலும்; பரப்பு என
இசைப்ப -
விரிந்துள்ளது என்று கூறுமாறு; சூழும் வானரப் படையொடு -
சூழ்ந்துள்ள வானர சேனையுடனே; துவன்றி - நெருங்கிவந்து; ஆழி மா
பரித்தேரவன் காதலன் -
ஒற்றைச் சக்கரத்தையும் சிறந்த
குதிரைகளையுமுடைய தேரைச் செலுத்துபவனான சூரியன் மகனாகிய
சுக்கிரீவனுடைய; அடிகள் வாழி வாழி என்று உரைத்து - திருவடிகள்
வாழ்க வாழ்கவென வாழ்த்தி; வணங்கி - வழிபட்டு; அலர் தூவினர் -
மலர்களைத் தூவினார்கள்.

     சூரியனது தேர், காலத்தின் வடிவமான ஒற்றைச் சக்கரத்தையும் ஏழு
குதிரைகளையும் உடையது என்பது நூற் கொள்கை.

     வாழி வாழி - அடுக்கு அன்பின் மிகுதி பற்றியது.                27