4435. | ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி, தையலாள் வரக் கண்டனன் ஆம் எனத் தளிர்ப்பான், எய்தினான், அங்கு ஓர் நெடு வரைச் சிகரத்தின் இருக்கை; வெய்யவன் மகன், பெயர்த்தும், அச் சேனையின் மீண்டான். |
ஐயனும் உவந்து - இராமனும் மகிழ்ந்து; அகம் என முகமலர்ந்து அருளி - தன் மனம் போலவே முகமும் மலரப் பெற்று; தையலாள் வரக் கண்டனன் ஆம் என - சீதையே நேரில் வந்திடக் கண்டவன் போன்று; தளிர்ப்பான் - மனக் கிளர்ச்சி கொண்டவனாய்; அங்கு ஓர் நெடுவரை - அங்கே இருந்த உயர்ந்த ஒரு மலையின்; சிகரத்தின் இருக்கை எய்தினான் - உச்சி இடத்தைச் சென்று அடைந்தான்; வெய்யவன் மகன் - சூரியனின் மகனான சுக்கிரீவன்; பெயர்த்தும் - மீண்டும; அச்சேனையின் மீண்டான் - அந்தச் சேனையிடம் திரும்பிச் சென்றடைந்தான். சேனையைக் கண்ட இராமனுக்குச் சீதையே மீண்டு வந்திடக் கண்டது போன்று மனக் கிளர்ச்சி ஏற்பட்டது என்கிறார். இந்தச் சேனையே கருவியாக இருந்து போர் வெற்றி தந்து சீதையை மீட்கும் காரியம் நிறைவேறிடும் என்ற நம்பிக்கையின் உறுதி இவ்வாறு வெளிப்பட்டது. 'தளிர்ப்பான்' என்ற சொல்லின் குறிப்பு மிகவும் நயமானது. முந்தைய படலங்களில் சீதையைப் பிரிந்ததனால் வாடிய இராமனிடம் புதிய தென்பு பிறந்தது என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது 'தளிர்ப்பான்' என்ற சொல்லாட்சி. தளிரே மரம் செடிகளின் எதிர்கால வளத்தைப் புலப்படுத்துமன்றோ? சேனைப் பரப்பு முழுவதும காண்பதற்கு ஒரு மலைச் சிகரமே பொருந்துமென்பது கவிஞர்குறிப்பு. 29 |