சுக்கிரீவன் இராமனுக்குத் தானையை வரன்முறைப்படி காட்டுதல்

4437. மீண்டு, இராமனை அடைந்து,
      'இகல் வீரருள் வீர!
காண்டி, நீ' என்று,
      வரன்முறை தெரிவுறக் காட்டி,
ஆண்டு இருந்தனன்; ஆர்த்து
      உருத்து எழுந்ததையன்றே,
ஈண்டு சேனை, பால் எறி
      கடல் நெறி படர்ந்தென்ன.    *

     (சுக்கிரீவன்)மீண்டு இராமனை அடைந்து - திரும்பவும் இராமனிடம்
வந்து (அவனை நோக்கி); 'இகல் வீரருள் வீர - வலிமை பொருந்திய
வீரர்களுள்ளே சிறந்த வீரனே!நீ காண்டி என்று - நீ காண்பாய் என்று;
வரன் முறை தெரிவுறக் காட்டி -
சேனைகளை முறையாகத் தெரியும்படி
(அவனுக்குக்) காண்பித்து; ஆண்டு இருந்தனன் -  அந்த இடத்தில்
இருந்தான் (அப்போது); ஈண்டு சேனை - திரண்ட அந்த வானர
சேனையானது; எறி பாற் கடல் - அலை வீசுகின்ற பாற்கடல்; நெறி
படர்ந்து என்ன -
வழியில் சென்றது போல; ஆர்த்து உருத்து எழுந்தது -
பேராரவாரம் செய்து (பிறர்க்கு) அச்சம் உண்டாகப் புறப்பட்டது.

     சுக்கிரீவன் வானரப் படைகளன் வரலாறுகளை இராமனுக்குச்
செம்மையாக விளங்கச் சொன்னான் என்பது.

     வானரப் படைக்குப் பாற்கடல் உவமை: நிறத்தாலும் ஆரவாரத்தாலும்
பாற்கடல் அலைகள் வானர சேனைக்கு உவமையாயின. ஐயரவர்கள் நூலகப்
பதிப்பில் இப்பாடல் இடம் பெறவில்லை.                            31