வானரப் படையின் பெருக்கம் 4438. | எட்டுத் திக்கையும், இரு நிலப்பரப்பையும், இமையோர் வட்ட விண்ணையும், மறி கடல் அனைத்தையும், மறையத் தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூமி, அட்டிச் செம்மிய நிறை குடம் ஒத்தது, இவ் அண்டம். |
எட்டுத் திக்கையும் - எட்டுத் திசைகளையும்; இரு நிலப் பரப்பையும்- பெரிய பூமியின் விரிந்த இடம் முழுவதையும்; இமையோர் வட்டவிண்ணையும் - தேவர்கள் வாழ்கின்ற வட்டவடிவமான மேலுலகத் தையும்; மறிகடல் அனைத்தையும் - அலைகள் வீசும் ஏழு கடல்களையும்; மறைய- மறையும்படி; தொட்டு மேல் எழுந்து ஓங்கிய - தரையிலிருந்து மெலெழுந்து பரந்த; தூளியின் - (படைகளின்) புழுதியால்; இவ் அண்டம் - இந்த அண்ட கோளமானது; பூழி அட்டிச் செம்மிய - புழுதியை இட்டு மூடிய; நிறை குடம் ஒத்தது - நிறை குடத்தை ஒத்திருந்தது. புழுதியால் நிறைந்த நிறைகுடத்தைத் தூளியால் நிரம்பிய அண்ட கோளத்திற்கு உவமையாக்கினார். தன்மைத் தற்குறிப்பேற்றவுவமையணி. 32 |