படையைக் குறித்து இராமலக்குவர் உரையாடல் 4440. | விண்ணின் தீம்புனல் உலகத்தின், நாகரின், வெற்றி எண்ணின், தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன், கண்ணின், சிந்தையின், கல்வியின், ஞானத்தின், கருதி, அண்ணல் - தம்பியை நோக்கினன், உரைசெய்வதானான்: |
வெற்றி எண்ணில் - வெற்றி பெறுவதைப் பற்றி ஆராய்ந்தால்; தான் அலது - தானே தனக்கு உவமையாவது அல்லாமல்; விண்ணில் - மேலுலகத்திலும்; தீம்புனல் உலகத்தில் - இனிய கடல் சூழ்ந்த உலகத்திலும்; நாகரின் - நாகர்கள் வாழும் பாதாள உலகத்திலும்; ஒப்பு இலன் என - உவமையில்லாதவன் எனச் சொல்லுமாறு; நின்ற இராமன் - (சிறப்போடு) விளங்கும் இராமன்; கண்ணின் - தன் கண்களாலும்; சிந்தையின் - மனத்தினாலும்; கருதி - அந்தச் சேனைப் பாப்பை நன்றாக ஆராய்ந்து; அண்ணல் தம்பியை நோக்கினன் - பெருமை வாய்ந்த இளைய பெருமாளைப் பார்த்து; உரை செய்வதானான் - (அச் சேனைபற்றிக் கூறத் தொடங்கினான். நாகர் - தானியாகுபெயர் (பாதாள உலகம்); படமும் வாலும் உடையராய் மனிதர் போன்ற உருவமும் தெய்வத் தன்மையுமுடைய பாம்புச் சாதியார். 'தீம் புனல்': உலகைச் சூழ்ந்து நிற்பது உவர்க் கடலே யெனினும் மக்களுக்க மிக இன்றியமையாத உணவிற்குச் சுவையளிக்கும் உப்பை விளைவித்தலால் 'தீம்புனல்' என்றார். உப்பு என்ற சொல்லுக்கே சுவை என்னும் பொருள் உண்டு. தன்துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் (3968), கூடடு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ (4029), துணை இலான் (6226) என்ற தொடர்கள் ஒப்பிட்டு உணரத்தக்கன. 34 |