4441.'அடல்கொண்டு ஓங்கிய சேனைக்கு,
      நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம்: இனி முடிவு
      உள காணுமாறு உளதோ? -
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்! -
     மண்ணிடை மாக்கள்,
''கடல் கண்டோம்'' என்பர்; யாவரே
      முடிவு உறக் கண்டார்?

     மடல்கொண்டு ஓங்கிய அலங்கலாய் - இதழ்கள் நிறைந்து சிறந்த
மாலையை அணிந்தவனே!நாமும் நம் அறிவால் - நாம் இருவரும் நமது
அறிவு கொண்டு; அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு - வலிமை பெற்றுச்
சிறந்துள்ள இந்த வானரப் படையின்; உடல் கண்டோம் - நடுவிடத்தை
ஓரளவு பார்த்தோம் (அல்லாமல்); இனி உள - இனி இதற்குள்ள; முடிவு
காணுமாறு உளதோ -
முடிவெல்லையைக் காணும் வகை ஏதேனும்
உண்டோ?மண் இடை - இந் நிலவுலகத்தில்; மாக்கள் - மனிதர்கள்; கடல்
கண்டோம் என்பர் -
கடலைப் பார்த்தோம் என்று சொல்வார்கள் (ஆனால்);
முடிவு உறக் கண்டார் யாவரே -
அக்கடலின் முடிவெல்லையைக்
கண்டறிந்தவர் யார்தாம்?

     கடலைக் காண்பவர் அதன் ஒரு பகுதியை மட்டும் காண்பாரேயல்லாமல்
அதன் முடிவெல்லையைக் காணமாட்டார்கள்; அதைப்போல நாமும்
இச்சேனைக் கடலின் ஒரு பகுதியை மட்டும் கண்டோமேயல்லாமல் இதன்
முடிவெல்லையைக் காணமுடியாதுஎன்பது.

     சேனைக்கு: உருபு மயக்கம்.                                  35