4442. | 'ஈசன் மேனியை, ஈர் - ஐந்து திசைகளை, ஈண்டுஇவ் ஆசு இல் சேனையை, ஐம்பெரும் பூதத்தை, அறிவை, பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, - வாச மாலையாய்! - யாவரே முடிவு எண்ண வல்லார்? |
வாச மாலையாய் - மணம் நிறைந்த மாலையை அணிந்தவனே!ஈசன் மேனியை - இறைவனின் திருமேனியையும்; ஈர் ஐந்து திசைகளை - பத்துத் திக்குகளையும்; ஐம்பெரும் பூதத்தை - ஐந்த பெரிய பூதங்களையும்; அறிவை - நுட்பமான அறிவையும்; பேசும் பேச்சினை - பேசும் மொழிகளையும்; சமயங்கள் பிணக்குறும் பிணக்கை - தமக்குள் சமயங்கள் மாறுபடுகின்ற மாறுபாட்டையும்; ஈண்டு இவ் ஆசு இல் சேனையை - இங்கே திரண்டுள்ள குற்றமற்ற இவ்வானரப் படையையும்; யாவரே முடிவு எண்ண வல்லார் - எவர்தாம் அவற்றின் முடிவைக் கணக்கிட வல்லவர்? உபமேயமாகிய சேனையையும் உவமானமாகிய ஈசன்மேனி முதலியவற்றையும் ஒருங்கே ஒரு பொதுத் தன்மையைக் கொண்டு முடியுமாறு கூறப்பட்டுள்ளது. இறைவன் எங்குமுள்ளவனாதலால் அவனது திருமேனி அளவிட்டு அறிய முடியாதது; ஐம்பெரும் பூதங்கள் உலக முழுவதும் நிம்பியிருத்தலால் அவற்றிற்கும் ஓர் அளவு இல்லை; புதிது புதிதாகப் பொருள்களை அறியும் அறிவுக்கும் ஓர் எல்லையில்லை; ஒருவர் ஒன்று பேசும்போது அதனைத் தொடர்ந்து பேசு இடம் உண்டாதலால் அதற்கும் ஓர் அளவில்லை. தன் தெய்வம் என் தெய்வம் என்று பேசிச் சழக்கிடும் சமய வாதங்களுக்கும் முடிவில்லை. இவற்றைப் போலவே வானரப் படையின் அளக்கமுடியாத நிலை இங்கே காட்டப்பெற்றுள்ளது. 36 |