4443. | 'இன்ன சேனையை, முடிவுற இருந்து இவண் நோக்கி, பின்னை காரியம் புரிதுமேல், நாள் பல பெயரும்; உன்னி, செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி' என்ன - வீரனைக் கைதொழுது, இளையவன் இயம்பும்: |
இன்ன சேனையை - இத்தகைய படையை; இவண் இருந்து முடி வுற நோக்கி - இங்கேயிருந்து முழுவதும் நன்றாகப் பார்த்து; பின்னை - அதன் பின்பு; காரியம் புரிதுமேல் - (நமது) செயலைச் செய்யத் தொடங்குவோமானால் (இதைப் பார்த்து முடிவதற்குள்); நாள் பல பெயரும் - பல நாட்கள் கழிந்து விடும்; உன்னி - (ஆகவே இனிச் செய்ய வேண்டியவற்றை) நன்றாக ஆராய்ந்து; செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி - செய்யவேண்டிய செயலில் மனம் ஒன்று பட்டுச் செய்ய முற்படுவதே நன்மை தருவதாகும்; என்ன - என்று (இராமன் கூற); இளையவன் - இலக்குவன்; வீரனைக் கை தொழுது இயம்பும் - இராமனை வணங்கிக் கூறலானான். தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால் (7382) என்றும் கும்பகருணனின் உருவத் தோற்றம் வருணிக்கப்பட்டதை இங்கு ஒப்பிட்டுணரலாம். 37 |