4446.'ஈண்டு, தாழ்க்கின்றது என், இனி -
      எண் திசை மருங்கும்,
தேண்டுவார்களை வல்லையில்
     செலுத்துவது அல்லால்?
நீண்ட நூல்வலாய்!' என்றனன்,
      இளையவன்; நெடியோன்,
பூண்ட தேரவன் காதலற்கு,
      ஒரு மொழி புகலும்:

     நீண்ட நூல் வலாய் - பெருமை வாய்ந்த நூல்களில் வல்லவனே;
எண்திசை மருங்கும் -
எட்டுத் திசைகளினிடங்களிளெல்லாம்; தேண்டு
வார்களை -
(சீதையைத்) தேடுவதற்கு உரியவர்களை; வல்லையில்
செலுத்துவது அல்லால் -
விரைவாக அனுப்புவதல்லாமல்; இனி ஈண்டுத்
தாழ்க்கின்றது என் -
இனிமேலும் இங்கிருந்து காலதாமதம் செய்வது
எதற்காக? என்றனன் இளையவன் - என்று இலக்குவன் கூறினான்.
நெடியோன் - பெருமை மிக்கவனான இராமன்; பூண்ட தேரவன் காதலற்கு-
ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரையுடையவனான சூரியன் மகனாகிய
சுக்கிரீவனுக்கு; ஒரு மொழிபுகலும் - ஒரு வார்த்தைசொல்லலானான்.   40