படையின் அளவு பற்றி இராமனும் சுக்கிரீவனும் உரையாடல்

கலிவிருத்தம்

4447.'வகையும், மானமும், மாறு
      எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி, நிரைந்து
      பரந்து எழும்
தகைவு இல் சேனைக்கு,
      அலகு சமைந்தது ஓர்
தொகையும் உண்டுகொலோ?'
      எனச் சொல்லினன்.

     'வகையும் - ஆராய்தலும்; மானமும் - ஒப்புமையும்; மாறு எதிர்ந்து
ஆற்றுறும் பகையும் -
எதிர்த்துச் செயல்படக்கூடிய பகைவரும் இன்றி -
இல்லாமல்; நிரைந்து - வரிசையாக அமைந்து; பரந்து எழும் - விரிவாகப்
பரவி எழுந்துள்ளதும்; தகைவு இல் சேனைக்கு - தடுப்பதற்கு எவரும்
இல்லாததுமான சேனைக்கு; அலகு சமைந்தது ஓர் தொகையும்
உண்டுகொலோ -
அளவு கொண்டு சொல்லக்கூடிய ஓர் எண்ணிக்கையும்
உண்டோ'; என - என்று இராமன் வினவ; சொல்லினன் - சுக்கிரீவன்
பின்வருமாறு சொன்னான்.

     தலைவன் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுதலன்றி வேறு ஆய்வு
மேற் கொள்ளுதல் படைவீரர்களுக்கு இல்லை என்ற கருத்தினை 'வகை. . .
இன்றி' என்ற தொடர்பு புலப்படுத்திற்று.  வகையும் மானமும் பகையும் இன்றி
எனக் கூட்டிப் பொருள் கொள்க.  வகைதல் - ஆராய்தல்.  'நகர் நீ
தவிர்வாய்' எனவும் வகையாது தொடர்ந்து' என்ற தொடரில் 'வகையாது' என்ற
சொல் 'ஆராயாமல்' என்ற பொருளில் வந்தது.  மானம் - ஒப்புமை. வகையும்
மானமும் பகையும் என்ற எண் ணும்மைச் சொற்கள் 'இன்றி' என்னும்
வினையெச்சம் கொண்டு முடிவதாகப் பாடல் அமைந்துள்ளதுகாண்க.     1