4448. | ' ''ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற'' என்று ஆற்றலாளர் அறிவின் அமைந்தது ஓர் மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றும் ஓர் தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? |
(அதுகேட்ட சுக்கிரீவன் இராமனை நோக்கி); ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று - (இந்த வானர சேனையின் அளவு) எழுபது வெள்ளம் என்னும் அளவால் அமைந்திருக்கின்றது என்று; ஆற்றலாளர் அறிவின் அமைந்தது - வல்லவருடைய அறிவினால் ஆராய்ந்து கண்ட தாகிய; ஓர் மாற்றம் உண்டு - ஒரு வார்த்தை உள்ளது; அது அல்லது - (அந்த வார்த்தை) அல்லாமல்; இதற்கு - இச் சேனைக்கு; மற்றும் ஓர் தோற்றம் என்று - வேறான ஒரு முடிவெல்லையுண்டு என்று; எண்ணி முன் சொல்லுமோ - ஆராய்ந்து சொல்ல இயலுமோ? (இயலாது). இச் சேனையின் தொகுதி பற்றி்ப் பெரியோர் எழுபது வெள்ளம் என்று கூறியதை உடன்படிவேண்டும்; மாறாக யாராலும் இவ்வளவென்று கணக்கிட்டுக் கூறுவது எவ்வாற்றாலும் இயலாது என்க. 2 |