4449.'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
ஏறு கொற்றத் தலைவர், இவர்க்கு முன்
கூறு சேனைப் பதி, கொடுங் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன்' என்று ஓதினான்.

     அனீகருக்கு - இச் சேனையிலுள்ள வானரங்களுக்கு; ஏறு கொற்றத்
தலைவர் -
சிறந்த வெற்றியையுடைய தலைவர்கள்; ஆறு பத்து எழு
கோடி-
அறுபத்தேழு கோடிக் கணக்கான; இவர்க்கு முன் கூறு
சேனைப்பதி -
இப் படைத் தலைவர்களுக்கும் முதலாகச் சொல்லப்பட்ட
தலைமைப் படைத்தலைவனானவன்; கொடுங் கூற்றையும் - கொடிய
யமனையும்; நீறுசெய்திடும் நீலன் - சாம்பலாக்கவல்ல வலிமையுள்ள
நீலனாவன்; என்று ஓதினான் - என்று சுக்கிரீவன் கூறினான்.

     எழுபது வெள்ளம் வானர வீரர்களுக்கு அறுபத்தேழு கோடி சேனைத்
தலைவர் உள்ளனர்; அந்தப் படைத் தலைவர்களுக்கெல்லாம் தலைவன் நீலன்
என்பது.  கொல்லுதல் தொழிலமைந்த யமனையே கொல்லும் திறம் வாய்ந்த
வானென நீலனது சிறப்பு கூறப்பெற்றுள்ளது.  அனீகம் - சேனை வகுப்பு;
அனீகர் - சேனையிலுள்ளவர்.                                      3