சுக்கிரீவன், அனுமனை அங்கதன் முதலிவர்களுடன்
தென்திசைக்கு அனுப்புதல்

4451. அவனும் - அண்ணல் அனுமனை, 'ஐய! நீ,
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை ஓர்கிலை; தாழ்த்தனை;
கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ?

     அவனும் - அந்தச் சுக்கிரீவனும்; அண்ணல் அனுமனை -
பெருமையில் சிறந்த அனுமனை (நோக்கி); ஐய - ஐயனே!நீ -, புவனம்
மூன்றும் -
மூவலகத்திலும்; நின் தாதையின் - உன் தந்தையாகிய
வாயுவைப் போல; புக்கு உழல் - புகுந்து செல்கின்ற; தவன வேகத்தை -
(உனது) மிக்க வேகத்தை; ஓர்கிலை - உணரமாட்டாமல்; தாழ்த்தனை -
வீணே தாமதிருத்திருக்கின்றாய்; கவன மாக் குரங்கின் - விரைந்து
செல்லக்கூடிய பெரிய குரங்குகளின்; செயல் காண்டியோ - ஆற்றல் மிக்க
செய்கையைக் காண விரும்புகின்றாயோ?

     மூவுலகத்திலும் இயங்கும் வல்லமை பெற்றிருந்தும் நீ இப்போது சீதையை
நாடிச் செய்தி தெரிந்து வராமல் வீணே நாள் கடத்துவது, மற்றை வானரர்கள்
சீதையைத் தேடும் திறத்தில் என்ன செய்கின்றார்கள் என்று காணக்
கருதுகிறாய் போலும் எனச் சுக்கிரீவன் அனுமனை நோக்கி்க் கூறினான்
என்பது,

     தவன வேகம் - ஒருபொருட் பன்மொழி. வேகத்தை (வேகத்தை உடைய
நீ) - முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று .                      5