4452. | 'ஏகி, ஏந்திழைதன்னை, இருந்துழி, நாகம் நாடுக; நானிலம் நாடுக; போக பூமி புகுந்திட வல்ல நின் வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். |
ஏகி - (நீ இங்கிருந்து) சென்று; ஏந்திழை இருந்துழி தன்னை - அணிகளையுடையவளாகிய சீதை இருக்கும் இடத்தை; நாகம் நாடுக - நாகர்கள் உறையும் பாதலத்தில் சென்று தேடுவாய்; நானிலம் நாடுக - பூமியிலும் தேடுவாய்; போக பூமி புகுந்திட வல்ல நின் வேகம் - போக பூமியான சொர்க்கலோகத்திற்கும் செல்ல வல்லமையுள்ள உனது வேகமும்; ஈண்டு வெளிப்பட வேண்டும் - இப்போது வெளியாக வேண்டும். 'நீ மூவுலகங்களிலும் சென்று சீதையைத் தேட வேண்டு'மென்று சுக்கிரீவன் அனுமனுக்குக் கூறினான் என்பது. ஏந்திழை: அன்மொழித் தொகை. இருந்துழி: தொகுத்தல் விகாரம். போகபூமி: உயிர்கள் புண்ணிய மிகுதியால் சென்று போகங்களைத் துய்க்கும் சுவர்க்கம். 6 |