4455. | 'தாரை மைந்தனும், சாம்பனும், தாம் முதல் வீரர் யாவரும், மேம்படும் மேன்மையால் சேர்க நின்னொடும்; திண் திறல் சேனையும், பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால். |
தாரை மைந்தனும் - தாரையின் மகனான அங்கதனும்; சாம்பனும் - (கரடிகளுக்கு அரசனான) சாம்பவானும்; முதல் வீரர் யாவரும் - முதலாகிய வீரர் பலரும்; மேம்படும் மேன்மையால் - மிகுந்த பெருமையோடு; நின்னொடும் சேர்க - உன்னுடன் வரட்டும்; வெள்ளம் இரண்டொடும் - இரண்டு வெள்ளம் என்னும் அளவுடனே; திண் திறல் சேனைகள் - மிக்க வலிமையுள்ள சேனைகள்; பெற்றியால் பேர்க - பெருமையோடு (உங்களுக்கு உதவியாகப்) புறப்படட்டும் (எனக்கூறி) அங்கதன், சாம்பவான் ஆகியோரோடும், இரண்டு, வெள்ளம் வானர சேனையோடும் புறப்பட்டுச் சீதையைத் தேட நீ தென்திசை செல்வாயெனச் சுக்கிரீவன் அனுமனுக்கு ஆணையிட்டான் என்பது. திண்திறல்: ஒரு பொருட்பன் மொழி. தாம் - அசை. 9 |