ஏனைத் திசைகளுக்கு மற்றவர்களை அனுப்புதல் 4456. | 'குட திசைக்கண், சுடேணன்; குபேரன் வாழ் வட திசைக்கண், சதவலி; வாசவன் மிடல் திசைக்கண், வினதன்; விறல் தரு படையொடு உற்றுப் படர்க' எனப் பன்னினான். |
குடதிசைக் கண் - மேற்குத் திசையில்; சுடேணன் - இடபனும்; குபேரன் வாழ் வடதிசைக்கண் - (திக்குப் பாலகனான) குபேரன் வாழுகின்ற வடக்குத் திசையில்; சதவலி - சதவலி என்னும் தலைவ னும்; மிடல் வாசவன் திசைக்கண் - வலிமைக்கொண்ட இந்திரனுக்குரிய கிழக்குத் திக்கில்; வினதன் - வினதனும்; விறல்தரு படையொடு - வலிமை மிக்க சேனையோடு; உற்றுப் படர்க - சேர்ந்து செல்வாராக; எனப் பன்னினான் - என்று கூறினான். குபேரன்: விச்சிரவசு என்னும் முனிவனுக்கு மூத்த மனைவியான பரத்து வாச மகளிடம் பிறந்த மகனாவான். வாசவன்: வசுக்களுக்குத் தலைவன். படர்கென - (அகரம்) தொகுத்தல் விகாரம். (படர்க + என) 10 |