ஒரு திங்களுக்குள் தேடித் திரும்புமாறு சுக்கிரீவன் ஆணையிடல்

4457.வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி, ஒரு மதி
முற்றுறாதமுன், முற்றுதிர், இவ் இடை;
கொற்ற வாகையினீர்!' எனக் கூறினான்.

     (சுக்கிரீவன் இடபன் முதலான வானர வீரர்களை நோக்கிக்); கொற்ற
வாகையினீர் -
வெற்றிக்கான வாகைமாலையை அணிவதற்கு உரியவர்களே!
வெற்றி வானரம் வெள்ளம் இரண்டொடும் -
(நீங்கள்) வெற்றி பெறும்
தன்மையுள்ள இரண்டு வெள்ளம் வானர சேனையோடும்; சுற்றி ஓடித்துருவி -
(பல இடங்களில்) அலைந்து திரிந்து (சீதையைத்) தேடி; ஒரு மதி
முற்றுறாதமுன் -
ஒரு திங்கள் கழிவதற்குள்ளே; இவ் இடை முற்றுதிர் -
இங்கே திரும்பி வந்து சேருங்கள்; எனக் கூறினான் - எனச் சொல்லினான்.

     நீங்கள் தனித் தனியே இரண்டு வெள்ளம் வானரப் படையோடு நான்
உங்களுக்குக் குறித்த திசைகளுக்குச்  சென்று சீதையைத் தேடி ஒரு
திங்களுக்குள் இங்கு வந்து சேரவேண்டுமென்று சுக்கிரீவன் ஆணையிட்டான்
என்பது.  வாகை -ஆகுபெயர்.                                    11