தென்திசை செல்லும் வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுதல்

4458.'ஈண்டுநின்று எழுந்து, ஈர் - ஐந்து நூறு எழில்
தூண்டு சோதிக் கொடு முடி தோன்றலால்,
நீண்ட நேமி கொலாம் என நேர் தொழ
வேண்டும் விந்தமலையினை மேவுவீர்.

     (தென் திசைக்குச் செல்லும் வானர வீரர்களைப் பார்த்துச் சுக்கிரீவன்);
ஈண்டு நின்று எழுந்து -
(நீங்கள்) இங்கிருந்து புறப்பட்டு; எழில் தூண்டு
சோதி -
அழகு மிகுந்து ஒளி வீசுகின்ற; ஈர் ஐந்து நூறு கொடு முடி
தோன்றலால் -
ஆயிரஞ் சிகரங்கள் காணப்படுவதால்; நீண்ட நேமி கொல்
ஆம் என -
பெரிய வடிவு கொண்ட திருமால்தானோ என்று; நேர்
தொழவேண்டும் -
எதிரே சென்று தொழுவதற்குரிய; விந்த மலையினை -
விந்திய மலையை; மேவுவீர் - முதலிலே சென்று சேருங்கள்.

     ஆயிரங் கொடுமுடிகளையுடைய விந்திய மலைக்கு ஆயிரம்
முடிகளையுடைய திருமாலை உவமையாக்கினார்.  நேமி - ஆகுபெயர்.    12