4459.'தேடி, அவ் வரை தீர்ந்த பின், தேவரும்
ஆடுகின்றது, அறுபதம் ஐந்தினைப்
பாடுகின்றது, பல் மணியால் இருள்
ஓடுகின்ற நருமதை உன்னுவீர்.

     அவ்வரை தேடித் தீர்ந்தபின் - அந்த விந்திய மலையில் சீதையைத்
தேடி முடித்த பின்பு; தேவரும் ஆடுகின்றது - தேவர்களும் வந்து நீராடப்
பெறுவதும்; அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது - (வெள்ளத்தால் அடித்து
வரப் பெற்ற மலர்களிலுள்ள தேனைப் பருகி அந்தக் களிப்பினால்) வண்டுகள்
பஞ்சமம் என்ற சுரத்தைப் பாடப் பெறுவதுமான; பல் மணியால் இருள்
ஓடுகின்ற -
(அங்குள்ள) பலவகையான இரத்தினங்களின் ஒளியால் இருள்
விலகுவதற்குக் காரணமான; நருமதை உன்னுவீர் - நருமதையாற்றைச்
சென்று அடைவீர்.

     நருமதை நதி: கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஓர் ஆறு;
தேவர்கள் நீராடும் தெய்வீகமும் வண்டுகள் இசைபாடும் சூழல் இனிமையும்,
மணியொளியால் இருள் நீங்கும் செல்வ வளமும் அந்த நருமதை நதிக்கு
உள்ளதெனக் கற்பனை செய்தமை நயமானது.  ஐந்து - பஞ்சமம்: ஏழு
சுரங்களுள் இது ஐந்தாவது.  அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது - சொல்நயம்.
                                                           13