4460. | 'வாம மேகலை வானவர் மங்கையர், காம ஊசல் களி இசைக் கள்ளினால், தூம மேனி அசுணம் துயில்வுறும் ஏமகூடம் எனும் மலை எய்துவீர். |
(அங்கிருந்து)வாம மேகலை வானவர் மங்கையர் - அழகிய மேகலையணிந்த தேவ மாதர்கள்; காம ஊசல் - விருப்பத்தோடு ஊஞ்சல் ஆடும்போது; களி இசைக் கள்ளினால் - மகிழ்ச்சியால் பாடுகின்ற இசையாகிய மதுவால்; தூம மேனி அசுணம் - புகை போன்ற கரிய நிறமுடைய அசுணமாப் பறவைகள்; துயில்வுறும் - தூங்குவதற்கு இடமான; ஏம கூடம் எனும் மலை எய்துவீர் - ஏமகூடம் என்னும் மலையைப் போய்ச் சேருங்கள். ஏமகூட மலையில் தேவமாதர்கள் வந்து ஊஞ்சலாடும்போது களிப்பினால் பாடுகினற இசைப் பாடலால் அசுணப் பறவை தூங்கும் என்பது. அசுணம் - இசையுணர்வுடைய பறவை; விலங்கு என்றும் கூறுவர். அரமங்கையர்: மரூஉ. (அமர மங்கையர்). ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில் ஒன்று. வாமம் - அழகு. 14 |