4468.'அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே
      எனத் தெளிந்த அருளின் ஆறும்,
வெவ் ஆறு ஆம் எனக் குளிர்ந்து, வெயில் இயங்கா
      வகை இலங்கும் விரி பூஞ் சோலை,
எவ் ஆறும் உறத் துவன்றி, இருள் ஓட
      மணி இமைப்பது, இமையோர் வேண்ட,
தெவ் ஆறு முகத்து ஒருவன், தனிக் கிடந்த
      கவணத்தைச் சேர்திர் மாதோ!

     அவ் ஆறு கடந்து - அந்தக் கோதாவரி யாற்றைத் தாண்டி; அப்பால்
-
பிறகு; அறத்து ஆறே என - தரும நெறியே போலவும்; தெளிந்த
அருளின் ஆறும் -
தெளிவான அருள் வழியும்; வெவ் ஆறு என -
விரும்பத்தக்க நன்னெறியும் போலவும்; குளிர்ந்து - குளிர்ச் சியையடைந்தது;
வெயில் இயங்காவகை இலங்கும் -
சூரியனுடைய கதிர்கள் தன்னுள்
புகாதபடி விளங்குகின்ற; விரி பூஞ்சோலை - மலர்ந்த பூக்கள் நிறைந்த
சோலையானது; எவ் ஆறும் உறத் துவன்றி - எந்தப் பக்கங்களிலும் (தன்
இரு கரைகளிலும்) மிக நெருங்கி; இருள் ஓட மணி இமைப்பது - (அச்
சோலையில் அடர்ந்த) இருளானது அறவே அகலுமாறு இரத்தினங்கள்
ஒளிவிடுவதற்கு இடமானதும்; இமையோர் வேண்ட - தேவர்கள்
விரும்பியதால்; தெவ் ஆறுமுகத்து ஒருவன் - பகைவரையழிக்கவல்ல
ஆறுமுகங்களையுடைய முருகன்; தனிக் கிடந்த கவணத்தை - தனியாக
இருந்த கவண நதியை; சேர்திர் - சென்று அடையுங்கள்.

     மாது, ஓ: ஈற்றசைகள்.

     சோலையின் தண்மைக்கு அறநெறியையும் அருள் நெறியையும்
உவமையாக்கினார்.  வெகுளிப்பண்பை வெம்மையதாகவும், சாந்த குணத்தைத்
தண்ணியதாகவும் கூறுதல் கவிமரபு.  சுவணநதியானது தன் இரு கரைகளிலும்
சூரியன் கதிர்களும் உள்ளே புகாதவாறு மரங்கள் அடர்ந்த சோலைகள்
நிரம்பப் பெற்று, அம் மரங்களின் அடர்த்தியால் செறிந்த இருளைத்
தன்னிடமுள்ள இரத்தின ஒளியால் போக்குமென்பது.                 22