4469. | 'சுவணநதி கடந்து, அப்பால், சூரிய காந் - தகம் என்னத் தோன்றி, மாதர் கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திர காந்தகமும், காண்பீர்; அவண் அவை நீத்து ஏகிய பின், அகல் நாடு பல கடந்தால், அனந்தன் என்பான் உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும், குலிந்தமும், சென்று உறுதிர் மாதோ. |
சுவணநதி கடந்து - சுவண ஆற்றைத் தாண்டி; அப்பால் - அதன் பிறகு; சூரிய காந்தகம் என்னத் தோன்றி - சூரிய காந்தம் என்று கூறுமாறு புகழ்பெற்று விளங்கி; (அம் மலையிலுள்ள); மாதர் கவண் உமிழ்கல் - பெண்களால் வீசப்பட்ட கவண்கயிற்றிலிருந்து வெளிப்படும் கற்கள்; வெயில் இயங்கும் கன வரையும் - வெயிலைக் கக்குகின்ற பெரிய மலையையும்; சந்திர காந்தகமும் - சந்திரகாந்த மலையையும்; காண்பீர் - பார்ப்பீர்கள்; அவண் அவை நீத்து ஏகியபின் - அங்குள்ள அம்மலைகளை விட்டு அப்பாலே சென்ற பிறகு; அகல்நாடு பல கடந்தால் - அகன்ற நாடுகள் பலவற்றைத் தாண்டிச் சென்றதால்; அனந்தன் என்பான் - ஆதிசேடன்; உவணபதிக்கு ஒளித்து உறையும் - பறவைகளுக்கு அரசனாகிய கருடனுக்கு அஞ்சி மறைந்து வாழுகின்ற; கொங்கணமும் - கொங்கணதேசத்தையும்; குலிந்தமும் - குலிந்த தேசத்தையும்; சென்று உறுதிர் - போய்ச் சேர்வீர்கள். மாது, ஓ: அசைகள். சூரிய காந்தகம் - சூரியன் கதிர்தோன்ற எரிந்து காட்டும் ஒரு கல். இது போன்றே சந்திரன் ஒளியால் நீராக உருகும் கல் சந்திரகாந்தக்கல். தினை முதலியவற்றின் கதிர்களைக் கிளி முதலான பறவைகள் உண்ணாதவாறு வேட்டுவ மாதர்கள் அருகில் அமைக்கப்பட்ட பரண்களில் காவலாக இருந்து அங்குள்ள கற்களையெடுத்துக் கவண்கயிறு கொண்டு வீசிப் பறவைகளையோட்டுவர். உவணபதி: இருபெயரொட்டு. உவணன்: அழகிய சிறகுகளையுடையவன் என்று பொருள்படும். 23 |