4470.'   ''அரன் அதிகன்; உலகு அளந்த அரி  அதிகன்''
      என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல்,
      புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச்
      சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
      நெடு மலையை வணங்கி, அப்பால்.

     அரன் அதிகன் - சிவபிரானே சிறந்த கடவுள்; உலகு அளந்த அரி
அதிகன் -
உலகங்களை (த்தன் திருவடிகளால்) அளவிட்ட திருமாலே சிறந்த
கடவுள்; என்று உரைக்கும் - என்று கூறும்; அறிவு இலோர்க்கு - தத்துவ
அறிவு இல்லாத மூடர்களுக்கு; பரகதி சென்று அடைவு அரிய பரிசேபோல்
-
மேலான கதியைச் சென்று அடைவதற்கு அரிய தன்மைபோல; புகல் அரிய
பண்பிற்கு ஆம் -
புகுதற்கரிய தன்மை பெற்றதும்; சுரநதியின் அயலது -
ஆகாயகங்கையின் அருகில் உள்ளதும்; வான் தோய் குடுமிச் சுடர்
தொகைய -
வானத்தையளாவிய தன் சிகரங்களில் (கதிர் மதியாகிய) இரண்டு
சுடர்களும் சேரக் கூடியதும்; தொழுதோர்க்கு எல்லாம் - தன்னை
வணங்கியவர் எல்லோர்க்கும்; அதிகம் வரன் தரும் தகைய - சிறந்த
வரங்களைக் கொடுக்கும் பெருமையுடையதுமான; அருந்ததி ஆம் நெடு
மலையை -
அருந்த தியென்னும் பெரிய மலையை; வணங்கி - (நீங்கள்
சென்று) தொழுது; அப்பால் - அதன் பிறகு. . . .

     கவிஞர்களுக்குக் கடவுளிடத்துள்ள பொதுநோக்கத்தைக் குறிப்பதாகும்
இச் செய்யுள்.  ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றும் வானத்திலிருந்து
விழும் மழைத் தாரைகள் அனைத்தும் கடலையே சென்று சேர்வது போன்று
சீவான் மாக்கள் எவ்வெத் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தினும்
அவ்வணக்கம் கேசவனையே சாருமென்றும், யாதொரு தெய்வங் கொண்டீர்.
அத் தெய்வமாகி, யங்கு மாதொருபாகனார்தாம் வருவர், என்றும் கூறப்படுவன
காணலாம்.

     வைணவத்தில் முதலாழ்வார்களின் பாசுரங்களில் சிவபிரானையும்,
திருமாலையும் ஒன்று படுத்திக் கூறியிருப்பதைக் காணமுடிகிறது.
'அரன்நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி' - (முதல் திருவ. 5);
'தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்' (மூன்றாம் திருவ. 63)

     வசிட்ட முனிவனின் அரிய பத்தினியான அருந்ததியின் பெயர் கொண்ட
மலையாதலின் 'அருந்ததி மா நெடுமலை' எனச் சிறப்பித்தான் சுக்கிரீவன்.   24