4471. | 'அஞ்சு வரும் வெஞ் சுரனும், ஆறும், அகன் பெருஞ் சுனையும், அகில் ஓங்கு ஆரம் மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வள நாடும் பிற்படப் போய்வழிமேல் சென்றால், நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு, அமிர்து நனி கொடுத்து, ஆயைக் கலுழன் நல்கும் எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி, அதன் புறம் சார ஏகி மாதோ |
அஞ்சுவரும் வெஞ்சுரனும் .(எல்லா வுயிர்களும்) அஞ்சக்கூடிய கொடிய பாலைவனமும்; ஆறும் அகல்பெருஞ் சுனையும் - நதிகளும், அகன்ற பெரிய சுனைகளும்; அகில் ஓங்கு ஆரம் மஞ்சு இவரும் நெடுங் கிரியும் - அகில் மரங்களும், உயர்ந்து வளர்ந்த சந்தன மரங்களும் மேகங்கள் வரை பொருந்திய மலைகளும்; வள நாடும் - செழிப்பான தேசங்களும்; பிற்படப் போய் - (உமக்குப் பின்புறத்தவாகுமாறு) அவற்றைக் கடந்து சென்று; வழிமேல் சென்றால் - அப்பாலுள்ள வழியில் சென்றால்; கலுழன் - கருடனானவன்; நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு - நஞ்சு பொருந்திய வாயினையுடைய நாகங்களுக்கு; அமிர்து நனி கொடுத்து - அமிழ்தத்தை மிகுதியாகக் கொடுத்து; ஆயை நல்கும் - (தன்) தாயாகிய விநதையை (அடிமைத் தொழிலிலிருந்து) மீட்பதற்கிடமான; எஞ்சு இல் மரகதப் பொருப்பை - எந்தக் குறையுமில்லாத மரகத மலையை; இறைஞ்சி - வணங்கி; அதன் புறம் சார ஏகி - அம் மலையின் பக்கத்து வழியைப் பற்றி அப்பால் சென்று. . . . மாது, ஓ - ஈற்றசைகள். மலைகள் மேகமண்டலத்தையும் கடந்த உயரத்தன என்பார் 'மஞ்சு இவரும் நெடுங்கிரி' என்றார். அரவு: காசியப முனிவனின் மனைவியான கத்துரு என்பவளது வயிற்றில் பிறந்த வாசுகி முதலிய நாகங்கள். கலுழன்: கருடன் - காசியப முனிவரின் மனைவியான விநதையினிடம் பிறந்தவன். 25 |