4472.'வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி,
      நான் மறையும்,மற்றை நூலும்,
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்,
      நல் அறிவுக்கு ஈறு ஆய், வேறு
புடை சுற்றும் துணை இன்றி, புகழ் பொதிந்த
      மெய்யேபோல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய
      வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ.

     வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி - வட திசை மொழி
களுக்கும் தென்மொழியாகிய தமிழுக்கும் எல்லையாகியும்; நான் மறையும்
மற்றை நூலும் -
நான்கு வேதங்களும் பிற சாத்திரங்களும்; இடை சொற்ற
பொருட்கு எல்லாம் எல்லையாய் -
தம்மிடம் குறித்துள்ள எல்லாப்
பொருள்களுக்கும் முடிவான பொருளைத் தன்பாற் கொண்டுள்ளதாகியும்; நல்
அறிவுக்கு ஈறாய் -
நுட்பமான ஞான அறிவுக்கெல்லாம் வரம்பாகியும்; புடை
சுற்றும் துணை வேறு இன்றி -
பக்கத்தில் பொருந்திய உவமானப் பொருள்
வேறொன்றும் இல்லாமல்; புகழ் பொதிந்த மெய்யே போல் - புகழ் நிரம்பிய
உடலைப் போல; பூத்து நின்ற - பொலிவுற்று விளங்குகின்ற; அடை சுற்றும்
தண் சாரல் -
தேன்கூடுகளால் சுற்றிலும் நிரம்பப்பெற்ற குளிர்ந்த
தாழ்வரைகளையுடைய; ஓங்கிய வேங்கடத்தில் - உயர்ந்துள்ள திருவேங்கட
மலையில்; சென்று அடைதிர் - போய்ச் சேருங்கள்.

     மாது, ஓ: ஈற்றசைகள்.

     வடக்கத்திய மொழிகள், தமிழ் மொழி ஆகிய இரண்டும் மிகுதியாக
வழங்கும் நிலங்களுக்கு இடையே நின்று எல்லை குறிப்பதனால்
திருவேங்கடமலையை 'வட சொற்கும் தென்சொற்கும் வரம்பிற்று' என்றார்.
'வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேஎம் (அகம். 211) என்ற சங்கப் பாடல்
வேங்கடத்துக்கு அப்பால் மொழி வழக்கு வேறுபடுவதைச் சுட்டுகிறது.  இம்
மலைக்கு உயர்விலும் புகழிலும் ஈடாகக்கூடிய வேறுமலையில்லை என்பார்
'புடை சுற்றும் துணையின்றி' என்றார்.  இம்மலை திருமாலின் வடநாட்டுத்
திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலாவது. வேங்கடம்: வேம் கடம் - தன்னை
அடைந்தோரின் பாவங்களை ஒழிப்பது. சாரல் - சார்ந்துள்ள இடம்:
தொழிலாகுபெயர்.                                              26