4473.'இருவினையும், இடைவிடா எவ் வினையும்,
      இயற்றாதே, இமையோர் ஏத்தும்
திருவினையும், இடு பதம் தேர் சிறுமையையும்,
      முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,
''கரு வினையது இப் பிறவிக்கு'' என்று உணர்ந்து,
      அங்கு அது களை, கடை இல் ஞானத்து,
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்;
      ஈண்டு இருந்தும் அடி வணங்கற்பாலார்.

     இருவினையும் - (நல்வினை தீவினைகளாகிய) இரண்டு வினை
களையும்; இடைவிடா எவ் வினையும் - இடைவிடாமல் தொடர்பு
கொண்டுள்ள எந்தக் கருமங்களையும்; இயற்றாதே - செய்யாமல்; இமையோர்
ஏத்தும் திருவினையும் -
தேவர்களும் புகழும் படியான நிறைந்த செல்வ
வாழ்க்கையையும்; இடுபதம் சேர் சிறுமையையும் - (பிச்சையாக) இடும்
சோற்றை எதிர்பார்த்திருக்கும் தாழ்வையும்; முறை ஒப்பத் தெளிந்து
நோக்கி-
சமமாகத் தெளிந்த பார்த்து; இப் பிறவிக்குக் கருவினையது
என்றுஉணர்ந்து -
இந்தப் பிறப்பு உண்டாவதற்கு மூலகாரணம் அந்த
இருவினைகளேயாகும் என்று தெளிந்து; அது - அவ் வினையின் தொடர்பை;
அங்கு -
அந்த இடத்திலேயே; களையும் - நீங்குதற்குரிய; கடை இல்
ஞானத்து -
எல்லையற்ற தத்துவ அறிவினை யுடைய; அரு வினையின்
பெரும்பகைஞர் -
(போக்குவதற்கு) அரிய இருவினைகளுக்குப் பெரிய
பகைவர்கள்; ஆண்டு உளர் - அம் மலையில் இருக்கின்றார்கள்; ஈண்டு
இருந்தும் -
அவர்கள் (நேரில் செல்லாமல்) இங்கிருந்த படியும்; அடி
வணங்கற் பாலார் -
(திசை நோக்கி) தொழுவதற்கு உரியவராவர்.

     இருவினை - நல்வினை தீவினை.  இவ் வினைகளே பிறப்பிற்குக்
காரணமாகும் யோக ஞான நெறிகளால் இருவினை கடந்து ஆன்ம பக்குவம்
பெற்று வினைகளை வென்ற ஞானியரை வினைப்பகைஞர்என்றார்.      27