4475.'கோடு உறு மால் வரைஅதனைக் குறுகுதிரேல்,
      உம் நெடிய கொடுமை நீங்கி,
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்; அப்
      புறத்து, நீர் மேவு தொண்டை -
நாடு உறுதிர்; உற்று, அதனை நாடுறுதிர்;
      அதன்பின்னை, நளி நீர்ப் பொன்னிச்
சேடு உறு தண் புனல் தெய்வத் திரு நதியின்
      இரு கரையும் தெரிதிர் மாதோ.

     கோடு உறு மால் வரை அதனை - சிகரங்கள் பொருந்திய பெரிய
அம்மலையை (திருவேங்கட மலை); குறுகுதிரேல் - நெருங்குவீர் களானால்;
உம் நெடிய கொடுமை நீங்கி -
உங்களுடைய மிகக் கொடிய பாவங்கள்
எல்லாம் நீங்க; வீடு உறுதிர் - உடனே முத்தி அடைவீர்கள்; ஆதலினால் -
ஆதலால்; விலங்குதிர் - (அதற்குள் புகாமல்) விலகிச் செல்லுங்கள்;
அப்புறத்து நீர் மேவு தொண்டை நாடு -
அதற்கு அப்பால் நீர் வளம் மிக்க
தொண்டை நாட்டை; உறுதிர் - சென்று அடையுங்கள்; உற்று அதனை
நாடுறுதிர் -
அவ்வாறு சேர்ந்து அந்த நாட்டைத் துருவித் தேடிக் காணுங்கள்;
அதன் பின்னை -
அதன் பிறகு; நளி நீர்ப்பொன்னி - பெருமையுள்ள நீர்
நிறைந்த பொன்னியென்னும் பெயர் கொண்ட; சேடு உறு - உயர்வான
தோற்றமுள்ள; தண் புனல் தெய்வத் திருநதியின் - குளிர்ந்த நீர் நிரம்பிய
தெய்வத்தன்மை பெற்ற காவிரி நதியின்; இரு கரையும் - இரண்டு
கரைகளிலும்; தெரிதிர் - (சீதையை) ஆராய்ந்து தேடுங்கள்.

     மாது, ஓ: ஈற்றசைகள்.

     திருவேங்கடமலையில் புகுந்த அளவிலே இருவினைத் தொல்லைகளும்
ஒழிந்து நீங்கள் முத்தியடைவீர்கள்; அவவ்ாறு நீங்கள் முத்தியடைந்து விட்டால்
சீதையைத் தேடும் செயல் நடைபெறாது. ஆதலால், அந்த மலைக்குச் செல்ல
வேண்டா என்று சுக்கிரீவன் மறுத்துக் கூறினான் என்பது.
பொன்னி நதி: தான் பெருகும் பொழுது பொன்னைக் கொழித்துக் கொண்டு
வருவதால் காவிரிக்குப் பொன்னி என்னும் பெயர் பொருந்திற்று.  தன்னில்
ஒரு கால் மூழ்கியவர்களுக்கும் பிறவிப் பிணியொழித்து நற்கதியளிக்கும் என்ற
நம்பிக்கையால் காவிரியைத் தெய்வத் திருநதி என்றார்.  ஏழு புண்ணிய
நதிகளில் காவிரியும் ஒன்று.                                    29