4477. | 'தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம்மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர். |
தென் தமிழ்நாட்டு - தெற்குத் திசையில் தமிழ்நாடான பாண்டிய நாட்டிலுள்ள; அகன் பொதியில் - அகன்ற பொதிய மலையிலே நிலை பெற்ற; திருமுனிவன் - சிறந்த அகத்திய முனிவனது; தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல் - தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின் (அம் மலையா னது); என்றும் அவன் உறைவிடம் ஆம் - எப்பொழுதும் அம் முனிவன் வாழ்ந்துவரும் இடமாகும்; ஆதலினால் - ஆதலால்; அம் மலையை இறைஞ்சி ஏகி - அந்தப் பொதிய மலையை வணங்கி அப்பாலே சென்று; பொன் திணிந்த புனல் பெருகும் - பொன் நிரம்பிய நீர் பெருகுகின்ற; பொருநை எனும் திருநதி பின்பு ஒழிய - தாமிரபரணி என்னும் அழகிய ஆறும் பிற்பட்டுப் போக; நாகக் கன்று வளர் - யானைக் கன்றுகள் வாழ்ந்து நிற்கும்; தடஞ்சாரல் மயேந்திரமாம் நெடுவரையும் - பெரிய தாழ்வரைகளையுடைய மகேந்திரம் என்னும் பெரிய மலையையும்; கடலும் - தென் கடலையும்; காண்டிர் - காண்பீர்கள். தமிழை வளர்த்த அகத்திய முனிவனுக்கு இருப்பிடமாதலால் பொதிய மலையை வணங்கிச் செல்லுமாறு சுக்கிரீவன் கட்டளையிட்டான். சங்கம்: புலவர் கூட்டம். அகத்திய முனிவன் வடதிசையிலிருந்து தமிழை வளர்க்கத் தென்திசை நோக்கி வந்தவனாதலால் அம் முனிவன் இருக்கும் இடத்தில் தமிழறிந்த புலவர் கூட்டம் நிரம்பியிருத்தல் இயல்பே. நாகம்: மலையில் வாழ்வது என யானைக்குக் காரணக்குறி. நாகக்கன்று - யானைக் கன்றுகள். 31 |