4478.'ஆண்டு கடந்து, அப் புறத்தும், இப்புறத்தும்,
      ஒரு திங்கள் அவதி ஆக,
தேண்டி, இவண் வந்து அடைதிர்; விடை கோடிர்,
      கடிது' என்னச் செப்பும் வேலை,
நீண்டவனும், மாருதியை நிறை அருளால் உற
      நோக்கி, 'நீதி வல்லோய்!
காண்டி எனின், குறி கேட்டி!' என, வேறு
      கொண்டு இருந்து, கழறலுற்றான்;

     ஆண்டு கடந்து - அந்த இடத்தைத் தாண்டிச் சென்று; அப்புறத்தும்
இப்புறத்தும் -
அதற்கு அப்பாலும் இந்த இடங்களிலும்; ஒரு திங்கள் அவதி
ஆகத் தேண்டி -
ஒரு திங்கள் முழுதும் அலைந்து (சீதையைத்)
தேடி; இவண் வந்து அடைதிர் - இங்கு வந்து சேருங்கள்; கடிது
விடை கோடிர் -
விரைவாக விடை பெற்றுச் செல்லுங்கள்; என்னச் செப்பும்
வேலை -
என்று (சுக்கிரீவன்) வானரங்களுக்குக் கட்டளை யிட்டபோது;
நீண்டவனும் -
(திருவிக்கிரம அவதாரத்தில்) திருமாலாகப் பேருருவம்
கொண்டவனான இராமனும்; மாருதியை - அனுமனை நிறை அருளால் உற
நோக்கி -
முழுக் கருணையோடும் உற்று நோக்கி; நீதி வல்லோய் - நீதி
நூல்களில் வல்லவனே!; காண்டி எனின் - (சீதையைக்) காண்பாயானால்
(இவள்தான் சீதையென்று தெளிவதற் காக); குறிகேட்டி - அவளுடைய அங்க
அடையாளங்களை (நான் கூறக்) கேட்பாய்; என - என்று; வேறு கொண்டு
இருந்து -
(அவனைத்) தனியே அழைத்துச் சென்று ஓரிடத்திலிருந்து; கழறல்
உற்றான் -
(அந்த அடையாளங்களைச்) சொல்லத் தொடங்கினான்.

     சுக்கிரீவன் இவனாலேதான் செயல் கைகூடும் என்னும் குறிப்போடு
அனுமனையே முதன்மையாகக் கொண்டு இவ்வளவும் கூறியதனாலும், தனக்கும்
சுக்கிரீவனுக்கும் முதலில் சொல்வன்மையால் நட்புச் செய்வித்தவன்
அனுமனேயாதலாலும், சீதையைத் தேடிக் காணுதலாகிய தொழில் இவனாலேயே
நிறைவேறுமென்று கருதி இராமனும் அனுமனைத் தனியிடம் கொண்டு சென்று
கூறலாயினான்.  அவதி: காலவரையறை.  கொள்திர் என்பது கோடிர் எனத்
திரிந்தது.  தேண்டி - தேடி என்பதன் விரித்தல்விகாரம்.             32