4481. | 'வினைவரால் அரிய கோதைப் பேதை மென கணைக் கால் மெய்யே நினைவரால் அரிய நன்னீர் நேர்பட, புலவர் போற்றும் சினை வரால், பகழி ஆவம், நெற் சினை, என்னும் செப்பம் எனைவரால் பகரும் ஈட்டம்; யான் உரைத்து இன்பம் என்னோ? |
வினைவரால் அரிய கோதைப் பேதை - ஒவியர்களால் தீட்டு வதற்கு அரிய கூந்தலையுடைய பேதைமைத் தன்மையுள்ளவளான சீதை யின்; மென் கணைக்கால் - மெல்லிய கணுக்கால்கள்; மெய்யே - உண்மையாகவே; நேர்பட நினைவரால் அரிய நன்னீர் - ஊகித்து உணர்பவராலும் (உவமை கூறுவதற்கு) அரியனவான நல்ல இயல்பு டையன; புலவர் போற்றும் - புலவர் உவமையாகப் பொருந்திக் கூறு கின்ற; சினைவரால் - கருக்கொண்ட வரால் மீனும்; பகழி ஆவம் - அம்பறாத் தூணியும்; சினை நெல் - சூல் கொண்ட நெற் பயிரும்; என்னும் - என்கின்ற; செப்பம் - சொற்கள்; எனைவரால் பகரும் - எல்லோராலும் சொல்லக் கூடிய; ஈட்டம் - தன்மையுடையன (அவற்றையே); யான் உரைத்து இன்பம் என்னோ - திரும்பவும் நான் எடுத்துக் கூறுவதால் வரும் இன்பம் யாதோ? புலவர்கள், மகளிர் கணைக்காலுக்கு உவமையாகக் கூறிவருகின்ற வரால் முதலியவற்றையே சீதையின் கணைக் காலுக்கு நானும் உவமையாக எடுத்துச் சொல்வது சிறிதும் இன்பம் தராது என்பது. எதிர் நிலையணி. வினைவர்: ஒவியம் தீட்டுவோர். வினைவர், நினைவர் - வினையாலணையும் பெயர்கள். 35 |