4482.'அரம்பை என்று, அளக மாதர்
      குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
வரம்பையும் கடந்தபோது, மற்று
      உரை வகுக்கல் ஆமோ?
நரம்பையும், அமிழ்த நாறும்
     நறவையும், நல்நீர்ப் பண்ணைக்
கரும்பையும் கடந்த சொல்லாள், கவாற்கு
      இது கருது கண்டாய்.

     அளக மாதர் குறங்கினுக்கு - கூந்தலையுடைய பெண்களின்
தொடைகளுக்கு; அரம்பை என்று  அமைந்த - வாழைகள் என்று ஏற்பட்ட;
ஒப்பின் வரம்பையும் -
உவமையின் எல்லையையும்; கடந்த
போது -
(சீதையின் தொடைகள்) வென்றன என்றபோது; மற்று உரை
வகுக்கல் ஆமோ -
(அவற்றிற்கு) வேறு உவமைகளை எடுத்துக் கூற
இயலுமோ? (இயலாது); நரம்பையும் - நரம்புகளையுடைய யாழினையும்;
அமிழ்த நாறும் நறவையும் -
அமிழ்தம்போல இனிமை விளங்கும்
தேனையும்; நல் நீர்ப்பண்ணைக் கரும்பையும் - நல்ல நீர்வளமுள்ள
வயல்களில் விளைந்த கரும்பின் சாற்றையும்; கடந்த சொல்லாள் - வெற்றி
கொண்ட சொற்களையுடைய சீதையின்; கவாற்கு - தொடை களுக்கு; இது -
(முன்னர்ச் சுட்டிய) வாழைபோன்ற வேறு உவமைகள்; கருது கண்டாய் -
(பொருந்தா என்பதை நீ) நினைந்து ஆராய்வாய்.

     கண்டாய்: முன்னிலையசை; தேற்றமும் ஆகும்.  பெண்களின்
தொடைகளைவிட வாழைகள் அழகில் சிறந்திருக்கும்; அந்த வாழைகளையும்
சீதையின் தொடைகள் வென்றன என்றதால் அவற்றிற்கு வேறு உவமானப்
பொருள் எடுத்துக் கூறல் அரியதாயிற்று.

     நரம்பு: யாழுக்குச் சினையாகுபெயர்.

     கரும்பு: அதன் சாற்றுக்கு இலக்கணை.

     கவான் -தொடை                                        36