4483. | 'வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள்தன் தார் ஆழி, கலை சார் அல்குல் தடங்கடற்கு உவமை - தக்கோய்! - பார் ஆழிப் பிடரில் தாங்கும் பாந்தளும், பனி வென்று ஓங்கும் ஓர் ஆழித் தேரும் ஒவ்வா, உனக்கு நான் உரைப்பது என்னோ? |
தக்கோய் - சிறந்தவனே!வார் - கச்சு அணிந்த; ஆழி, கலசக் கொங்கை - சக்கரவாகப் பறவையையும் கலசத்தையும் போன்ற முலை களையும்; வஞ்சிபோல் மருங்குலாள்தன் - வஞ்சிக் கொடி போன்ற இடையையுமுடைய சீதையின்; தார் - ஒழுங்கான; ஆழி - வட்ட வடிவமான; கலைசார் அல்குல் தடங்கடற்கு - மேகலையைச் சார்ந்துள்ள அல்குலாகிய பெரிய கடலுக்கு; உவமை - உவமிக்கக் கூடிய பொருளாக; ஆழி பார் பிடரில் தாங்கும் பாந்தளும் - கடல் சூழ்ந்த இப் பூமியைத்தன் தலையில் தாங்குகின்ற ஆதிசேடனது படமும்; பனி வென்று ஓங்கும் ஓர் ஆழித்தேரும் - பனியை அடக்கி மேலே உயர்ந்து விளங்குகின்ற ஒற்றை உருளையுடைய (சூரியனின்) தேர்த் தட்டும்; ஒவ்வா - பொருந்திவாரா; உனக்கு - (யாவும் தெரிந்த) உனக்கு; நான் உரைப்பது - நான் புதிதாகக் கூற வேண்டுவது; என்னோ - என்ன உள்ளது? (எதுவுமில்லை) ஆதிசேடனது படத்தையும், கதிரவனின் தேர்த்தட்டையுமே சீதையின் அல்குலுக்கு உவமையாகக் கூறினும் பொருந்தா என்பது. சக்கரவாகமும் பொற்கலசமும் தனங்களுக்கு வடிவு பற்றிவந்த உவமைகள். ஓராழித் தேர் - ஒற்றைச் சக்கரமுடைய கதிரவன் ஊரும் தேர். ஆழி என்ற சொல் நான்கடிகளிலும் வந்துள்ளது. சொற் பின்வரு நிலையணி. ஆழி - சக்கரவாகப் பறவை. கலை - ஆடையெனினும் அமையும். 37 |