4484.'சட்டகம் தன்னை நோக்கி,
      யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை
      இயம்பக் கேட்டு உணர்தி என்னின்,
கட்டுரைத்து உவமை காட்ட,
      கண்பொறி கதுவா; கையில்
தொட்ட எற்கு உணரலாம்; மற்று
      உண்டு எனும் சொல்லும் இல்லை.

     சட்டகம் தன்னை நோக்கி - (சீதையின்) வடிவ அழகைக் கண்டு;
யாரையும் சமைக்கத் தக்காள் -
எத்தகைய அழகுள்ள பெண்களையும்
(பிரமன்) படைக்கத் தகுந்த பேரழகையுடையவளின்; இட்டு இடை இருக்கும்
தன்மை -
சின்ன இடை அமைந்துள்ள வகையை; இயம்பக் கேட்டு உணர்தி
என்னின் -
உவமை சொல்லக் கேட்டு நீ அறிய வேண்டுமென்றால் (அது
முடியாது; ஏனென்றால்); கட்டு உரைத்து உவமை காட்ட - உறுதியாக
எடுத்துச் சொல்லி உவமானப் பொருளைக் காட்டுவதற்கு; கண் பொறி கதுவா
-
(அந்த இடையைக்) கண்ணாகிய பொறியால் காணமுடியாது (அந்த இடை
கண்ணுக்குப் புலனாகாது); கையில் தொட்ட - கைகளால் தீண்டித் துய்த்த;
எற்கு உணரல் ஆம் -
என்னால் மாத்திரமே (உண்டென்று) அறியக் கூடும்;
மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை -
வேறு வகையில் உண்டு என்று
சொல்வதற்கும் வழியில்லை.

     அழகிய பெண்களைப் படைப்பதற்குப் பிரமன் முன்மாதிரியாகக்
கொள்வது சீதையின் வடிவமே என்பது கருத்து.  சீதையின் இடை
பரிசவுணர்ச்சியின் மூலமாக என்னால் மாத்திரமே உண்டென்று உணரப்
படுவது; ஒருவரின் கண்ணுக்குப் புலனாகாதவாறு மிகவும் நுண்ணியது;
ஆதலால், அதற்கேற்ற உவமைப் பொருளை எடுத்துச் சொல்லுவது முடியாது
என்பது.  எத்துணை அழகுள்ள பெண்களைப் படைக்க விரும்பினாலும்
பிரமன் இவளது வடிவத்தையே மாதிரியாக வைத்துப் படைக்குமாறு
அழகோவியமாக உள்ளாள் சீதையெனச் சீதையின் பேரழகைக் குறித்தவாறு.
சட்டகம் - வடிவு                                              38