4485.'ஆல் இலை, படிவம் தீட்டும்
      ஐய நுண் பலகை, நொய்ய
பால் நிறத் தட்டம், வட்டக்
      கண்ணடி, பலவும் இன்ன,
போலும் என்று உரைத்த போதும்,
      புனைந்துரை; பொதுமை பார்க்கின்,
ஏலும் என்று இசைக்கின், ஏலா;
      இது வயிற்று இயற்கை
; இன்னும்,

     பொதுமை பார்க்கின் - பொதுநோக்காகப் பார்த்தால் (பெண்களின்
வயிறு); ஆல் இலை - ஆலிலையையும்; படிவம் தீட்டும் ஐய நுண்பலகை
-
வடிவம் எழுதிய அழகிய மெல்லிய சித்திரப் பலகையையும்; நொய்ய பால்
நிறத் தட்டம் -
மிக மென்மையாயும் பால்போல வெண்ணிறமாயும் உள்ள
வெள்ளித் தட்டினையும்; வட்டக் கண்ணடி - வட்ட வடிவமான
கண்ணாடியையும்; இன்ன பலவும் - இவை போல்வன பலவற்றையும்;
போலும் -
ஒத்திருக்கும்; என்று உரைத்த போதும் - என்று கூறினாலும்;
புனைந்துரை -
(இவையெல்லாம்) இட்டுக் கட்டிச் சொல்லப் பட்டனவேயாகும்;
ஏலும் என்று இசைக்கின் -
(சீதையின் வயிற்றுக்கோ முன் கூறிய ஆலிலை
முதலியன) பொருந்தும் என்றும் கூறினால்; ஏலா - அவை சிறிதும்
பொருந்தாவாம்; இது வயிற்று இயற்கை - இது (சீதையினது) வயிற்றின்
இயல்பாகும்; இன்னும் - மேலும். . .

     மற்றைப் பெண்களின் வயிற்றுக்கு ஆலிலை முதலியவற்றை உவமை
கூறினால் புனைந்துரையாகும்; அப்பொருள்களையே இச்சீதையின் வயிற்றுக்கு
உவமை கூறினால் அவை உவமையாவதற்கே பொருந்தா என்பது.
எதிர்நிலையணி.  ஐய - (அழகிய) ஐ என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்த
குறிப்புப் பெயரெச்சம்.                                          39