4486.'சிங்கல் இல் சிறு கூதாளி,
      நந்தியின் திரட் பூ, சேர்ந்த
பொங்கு பொன் - துளை, என்றாலும்
      புல்லிது; பொதுமைத்து ஆமால்;
அங்கு அவள் உந்தி ஒக்கும்
      சுழி எனக் கணித்தது உண்டால்;
கங்கையை நோக்கி சேறி -
      கடலினும் நெடிது கற்றோய்!

     கடலினும் நெடிது கற்றோய் - கடலைக் காட்டிலும் விரிவாகக்
கற்றுணர்ந்தவனே! சிங்கல் இல் சிறு கூதாளி - (சீதையின் உந்திச் சுழிக்கு)
சுருங்காத சிறு கூதாளிச் செடியும்; நந்தியின் - நந்தியாவட் டையும் (என்ற
இவற்றின்); திரள் பூ - வட்ட வடிவமான மலர்களிலே; சேர்ந்த பொங்கு
பொன்துளை -
பொருந்திய பெரிய அழகிய துளைகள்; என்றாலும் -
(உவமையாகும்) என்று கூறினாலும்; புல்லிது - (அவை) மிக அற்பமானவை;
பொதுமைத்து ஆம் -
தவிர, பொதுவகையால் கூறியதும் ஆகும்; சுழி -
(கங்கையின்) நீர்ச் சுழியானது; அவள் உந்தி ஒக்கும் - அச் சீதையின்
உந்தியை ஒத்திருக்கும்; என அங்கு - என்று அவ்விடத்து; கணித்தது
உண்டு -
(கங்கையைக் கண்ட போது) நான் கருதியது உண்டு; கங்கையை
நோக்கி சேறி -
(ஆகையால்)  கங்கையை மனத்தில் பதித்துக் கொண்டு
(அச் சீதையின் உந்தியை இன்னபடி உள்ளதென்று) எண்ணிச் செல்வாய்;

     ஆல்: இரண்டும் ஈற்றசைகள்.

     கங்கையின் நீர்ச் சுழியே சீதையின் உந்திக்கு ஏற்ற உவமையாகும்
என்பது கருத்து.  சிங்கல் - கெடுதல்.  அனுமனின் பரந்த கல்வியறிவையும்,
நுண்மான் நுழை புலத்தையும் பாராட்டிக் கடலினும் நெடிது கற்றோய்'
என்றான்.  'இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூரக் கல்லாத
கலையும் வேதக் கடலுமே (3768) என அனுமனின் கல்வித்திறத்தை
இராமபிரான் கூறியதை நினைவு கூர்க.  சீதையின் உந்திச் சுழிக்குக்
கூதாளிமலரின் உள் துளையும் நந்தியாவட்ட மலரின் உள்துளையும் சிறிதும்
உவமையாகா; நான் கங்கைவழியே வந்தபோது அந்தக் கங்கைநதியின் நீர்ச்
சுழிக்குச் சீதையின் உந்திச் சுழியை உவமையாகக் கருதியதுண்டு.  நீயும் அக்
கங்கையின் நீர்ச் சுழியும் சீதையின் உந்திச் சுழயும் ஒக்குமெனக் கருதுவாய்
என்பது. எதிர்நிலையணி.

     கூதாளி - கார் காலத்து மலரும் ஒரு வகைச் செடி.             40