4487.'மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால்,
      வல்லி சேர் வயிற்றில்; மற்று என்,
உயிர் ஒழுக்கு; அதற்கு வேண்டும்
      உவமை ஒன்று உரைக்கவேண்டின்,
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற
     சிறு கொடி நுடக்கம் தீர,
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு,
      என்று உணர்ந்து கோடி.

     வல்லிசேர் வயிற்றின் - கொடி போன்ற சீதையின் வயிற்றிலே; மயிர்
ஒழுக்கு என ஒன்று உண்டு -
மயிரொழுங்கு என்ற ஒன்று உள்ளது; என்
உயிர் ஒழுக்கு -
(அஃது) எனது உயிரின் ஒழுக்கேயாகும்; அதற்கு
வேண்டும் உவமை ஒன்று -
அதற்கு யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க ஓர்
உவமையை; உரைக்க வேண்டின் - சொல்ல வேண்டுமானால் (அது
முடியாது); செயிர் இல் சிறு இடையாய் உற்ற - (ஆயினும்) குற்றமற்ற
நுண்ணிய இடையென்று அமைந்த; சிறு கொடி - சிறிய கொடியின்; நுடக்கம்
தீர -
தளர்ச்சி ஒழிய(ப் படருமாறு); குயிலுறுத்து - நன்றாகப் பதியும்படி;
அமைய வைத்த -
பொருந்த வைத்த; கொழு கொம்பு என்று  - கொழு
கொம்பாகு மென்று; உணர்ந்து கோடி - அறிந்து கொள்வாய்.

     சீதையின் வயிற்றில் நெடுக உள்ளதை உலகத்தவர் மயிரொழுங்கு
என்பார்கள்; ஆனால், அது மயிரொழுங்கன்று: எனது உயிரொழுங்காம்
என்பது. இடைக்கு மேற்புறத்திலுள்ள அந்த வயிற்றின் மயிரொழுங்கிற்கு
உவமைகூற இயலாது; ஆனால் இடையாகிய கொடி துவளாமல் படர்வதற்க
நாட்டிய கொழு கொம்பு போன்றது எனலாம் என்றான் இராான்.  அவநுதி
அங்கமாய தற்குறிப்பேற்றவணி.  வல்லி -உவமையாகுபெயர்.          41